சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை (நவம்பர் 10) இரவு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் பொதுமக்கள் அதிக அளவு கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக இருக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து ஐந்து அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பெட்டிளில் கத்திரிக்கோல், பிளேடு கத்திகள், பின்னல் ஊசிகள், கயிறு, இன்சுலேஷன் டேப், நடக்க உதவும் கோல் (walking stick), கோடரி போன்ற கூர்மையான ஆயுதங்கள், ஊறுகாய் போத்தல்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கும் அதே வேளை, திடீரென மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், சென்னை விமான நிலையத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் எவ்வாறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். திடீரென நடத்தப்பட்ட ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.

