சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
மேலும், புதிய குழுவில் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் அக்குழுவின் உறுப்பினர் - செயலராகச் செயல்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
தற்போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய குழுவானது 4ஆம் வகுப்பு முதல் புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து அரசிடம் அளிக்கும்.
அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்படியாக புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.

