சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட நிலையங்களுடன் இணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல்

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட நிலையங்களுடன் இணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல்

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

29 Nov 2026 - 8:55 pm

1 mins read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் 128 நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்–-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் இது செயல்படுத்தப்படுகிறது. அருகிலுள்ள பெருநிறுவன அலுவலகங்கள், பலநோக்கு வளாகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகளுக்கு நேரடி இணைப்பு வழங்கப்படும்.

தனித்துவ நடைமேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல், கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்திப் பயணிகள், பணியாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் தடையின்றிச் செல்ல இது உதவும்.

இணைப்புப் பாலங்களை அமைப்பதற்கான முழு மூலதனச் செலவையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பிறகு தூய்மைப் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளை மெட்ரோ நிறுவனம் மேற்கொள்ளும்.

பொதுவாக நிலையத்தின் கட்டணம் செலுத்தாத பகுதிக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்படும். கட்டணம் செலுத்தும் பகுதிக்கு இணைப்பு தேவைப்பட்டால் அதற்கான கூடுதல் செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும்.

தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் அதிகாரிகள் ஒப்புதலுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விரைவில் விரிவான விருப்ப வெளிப்பாட்டு ஆவணம் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்