தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

கோப்புப் படம்: தினமணி

28 Jun 2026 - 6:47 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக உருவெடுத்துள்ளது அரக்கோணம்.

அங்குள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதையடுத்து, தமிழக அரசுக்கும் அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜுக்கும் பாராட்டுகள் குவிந்துள்ளன.

அரக்கோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நான்கு மதுக்கடைகள் இயங்கி வந்தன. அந்த மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் ஏற்பட்டன.

போக்குவரத்து நெரிசல், பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கும் நிலை ஆகிய பிரச்சினைகளால் கடும் அவதிக்கு ஆளாவதாக அரக்கோணம் தொகுதிப் பெண்கள் பல மாதங்களாகப் புலம்பி வந்ததனர் என்றும் ரயில் நிலையம் அருகே இருந்த காவல்நிலையம் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் மதுக்கடைகளைத் தினமும் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. இதையடுத்து மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி அரக்கோணம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதன் காரணமாக, அரக்கோணத்தில் மூன்று மதுக்கடைகள் சில நாள்களுக்கு முன்பு மூடுவிழா கண்டன.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று மீதமிருந்த ஒரு மதுக்கடையும் மூடப்பட்டுவிட்டது. தற்போது அரக்கோணம், மது இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்