சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடி சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) வியாழக்கிழமை முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
“அதிமுகவின் ஒழுங்கு கெடும் வகையில் கட்சிக்கு களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தால் மலர்க்கொடி நீக்கப்பட்டுள்ளார்,” என்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவரணி துணைத்தலைவராக இருந்தார்.
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரன் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி செயலாளர் புளியாந்தோப்பு அஞ்சலை என்பவரை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை, கொலை நடந்த அன்றிரவே காவல்துறை கைது செய்தது. அவர்களில் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்த திருவேங்கடம் என்பவர் காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.