தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாபநாசம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்றவர் கைது

2 mins read
4ccf6784-5cb9-4bd6-9c72-791511859a6f
அச்சுப் பிரதி இயந்திரம் வைத்து வண்ணத் தாளில் கள்ள நோட்டு அச்சடித்துள்ளார். - படங்கள்: தமிழக ஊடகம்

விக்கிரமசிங்கபுரம்: நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மருதம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சமீர் (வயது 28).

இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த களஞ்சியம் என்பவரின் மகன் ஆசைத்தம்பி (55) வந்துள்ளார்.

தொடர்ந்து அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து கால் கிலோ கத்தரிக்காய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், நோட்டில் சந்தேகம் ஏற்படவே அருகே காய்கறி வாங்கிக் கொண்டிருந்த சுடலையாண்டி என்பவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது.

உடனே ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை முகமது சமீரும், சுடலையாண்டியும் சேர்ந்து சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல்துறை ஆய்வாளர் சுஜித் ஆனந்த் விசாரணை நடத்தியதில், அவர் தனது வீட்டில் அச்சுப் பிரதி இயந்திரம் வைத்து வண்ணத் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அதனைக் கடைகளில் கொடுத்து பொருள்கள் வாங்கிக் கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததில் ஓர் அச்சுப் பிரதி இயந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 25, நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் வண்ணம் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக முகமது சமீர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசைத்தம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறிப்புச் சொற்கள்