சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், அவ்விருக் கட்சிகளின் தலைமையும் போட்டுள்ள தேர்தல் கணக்கு குறித்து புதுத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக, பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
பாஜகவுடன் தோழமை பாராட்டக் கூடியவை என நம்பப்படும் பல்வேறு கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்தார் அண்ணாமலை.
எனவே, அவரது பதவி விலகலுக்குப் பிறகு அக்குறிப்பிட்ட கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு என்னவாகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.
இந்நிலையில், தேமுதிக திடீரென திமுக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டி வருகிறது.
காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்படும் என்று அதிமுக வாக்குறுதி அளித்திருந்ததாகவும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக தலைமை இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் என பாஜக கூறியுள்ளது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்தில் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களுடன் கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம். ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்,” என்று சுதீஷ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறியுள்ளார்.
“திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம். திமுகவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு முக்கியம். எனவே, திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரையும் வரவேற்போம். சீமானுக்கும் இது பொருந்தும்,” என்று ராம.சீனிவாசன் தெரிவித்தார்.
“திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை இணைத்துக்கொள்ளவும் தயார் என பாஜக கூறுகிறது. விசிகவுக்குத்தான் பாஜக வலைவீசுவதாகக் கருதப்படுகிறது.
“தற்போதைய சூழலில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பில்லை. திமுக கூட்டணியில் மாற்றம் இல்லை என முதல்வர் ஸ்டாலினும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்,” என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்றும் விஜய் இணையப்போவது சீமானுடனா அல்லது பாஜகவுடனா என்பது விரைவில் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.