சென்னை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் அவரது குடும்பத்தாரும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னதாக, கடலூர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கடந்த 1996-2001, 2006-2011ஆம் ஆண்டுகளில், திமுக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என்று புகார் எழுந்தது.
இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
அனைத்து வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வேல்முருகன், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளார்.