கர்ப்பிணி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்

கர்ப்பிணி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்

1 mins read
17a040fb-70f0-426f-a2e7-c7da6bbeac79
விஜய். - படம்: தினமலர்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தினர்மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதாக கட்சித் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தவெகவுக்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள தவெகவினர் மீது இவ்வாறான வன்முறையை நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ஆளும் திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும் விஜய் விமர்சித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்ளிட்ட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் விஜய் கூறியுள்ளார்.

“மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப்போவது உறுதி,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்