கோயம்புத்தூர்: சிறியவர்களுக்கு மட்டுமன்று, பெரியவர்களுக்கும் யானைகளைக் கண்டால் குதூகலந்தான்!
அப்படியிருக்க, பசுமைச் சூழலில் குட்டி யானை நடுவிலும் அதற்குப் பாதுகாப்பாக, அதனைச் சுற்றி நான்கு யானைகளும் உறங்கும் காணொளி, இணையவாசிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.
இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரி சுப்ரியா சாஹு தமது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் இக்காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
“தமிழ்நாட்டின் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த காடுகளில் எங்கோ ஓர் அழகான யானைக் குடும்பம் மகிழ்ச்சியுடன் உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் `இசட் பிரிவு’ பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். மேலும், தன் குடும்பத்தினர் உடனிருப்பதை அக்குட்டி யானை உறுதிசெய்துகொள்வதையும் பாருங்கள். இவை நமது சொந்த குடும்பங்களைப் போலவே உள்ளது அல்லவா!” என்று திருவாட்டி சுப்ரியா அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாணு பரன் என்ற ஒளிப்படக் கலைஞர் இந்த 15 நொடிக் காணொளியை ஆளில்லா வானூர்தி கொண்டு எடுத்துள்ளார்.