தவெக அமைச்சர்களின் பின்னணி

தவெக அமைச்சர்களின் பின்னணி

3 mins read
71f59ba7-948a-4c77-ae5a-fbe9545c1fc1
கீர்த்தனா. - படம்: டிஐபிஆர்
multi-img1 of 2

சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.

புதுவையில் உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆனந்த் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் புஸ்சி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார்.

எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள அவர், புதுவை விஜய் ரசிகர் மன்றத்தின் கெளரவச் செயலாளராக இருந்தவர்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்பு விஜய்க்கும் நெருக்கமானார்.

43 வயதான ஆதவ் அர்ஜுனா, திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இளங்கலை பட்டம் பெற்றுள்ள அவர், கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (மகளின் கணவர்) ஆவார். அடிப்படையில் விளையாட்டு வீரர். தேர்தல் வியூக வகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். திமுக, விசிக கட்சிகளிலும் சில காலம் பொறுப்பு வகித்தவர்.

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 46) முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்.

சில ஆண்டுகள் கிருஷ்ணகிரியில் மருத்துவராகப் பணியாற்றிய அவர், மத்திய அரசின் வருமான வரித்துறையில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றியுள்ளார்.

நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்ற இவருக்கு 77 வயதாகிறது.

கட்சியிலும் அதிமுக ஆட்சிக் காலங்களிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்த செங்கோட்டையன் கடந்த 2025ஆம் ஆண்டில் அதிமுக தலைமைக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அமைச்சர் வெங்கடராமன் (44 வயது), தவெக பொருளாளராக உள்ளார். உசிலம்பட்டி நடுமுதலைக்குளம்தான் இவரது பூர்வீக ஊர்.

பொறியியல் பட்டதாரியான நிர்மல்குமார், சட்டப்படிப்பை முடித்து, குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். நிர்மல் குமார் பாஜகவின் மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவுத் தலைவராக இருந்தார்.

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி, அதிமுகவில் 2023ல் இணைந்தார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் (வயது 39), இதழியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார்.

தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், திரைப்பட நடிகர் என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வந்த ராஜ்மோகன், கடந்த 2023ஆம் ஆண்டில் ‘பாபா ப்ளாக் ஷீப்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தவெகவில் அவருக்கு கொள்கை பரப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தோற்கடித்த டி.கே. பிரபு ஒரு மருத்துவர் ஆவார்.

29 வயதான கீர்த்தனா எம்எஸ்சி பட்டதாரி ஆவார். தனிநபர் ஆலோசகராக பணியாற்றுகிறார். தேர்தலில் வென்றதும் தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தனா இந்தியில் பேசியது சமூக ஊடகங்களில் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளானது.

தற்காலிக சபாநாயகர் தேர்வு

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திங்கட்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் பதவிப் பிராமணம் செய்து வைக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்