ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்: பிசினஸ் லைன்

11 Jul 2026 - 7:26 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்‌.

இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.

இதேபோல் கரூர் தொகுதியில் எம்ஆர் விஜயபாஸ்கர், விராலிமலையில் சி விஜயபாஸ்கர், பெருந்துறையில் ஜெயகுமார், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவைச் சேர்ந்த இந்த நான்கு பேரும் அண்மையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து, மேற்குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இடைத்தேர்தல் நடத்துவதன் அவசியம் குறித்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுந்தரேசன், தன் வாதத்தை முன்வைத்தார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தேர்தல் வழக்குகள் தொடுக்கப்படுவதற்கு முன்பே முதல்வர் விஜய் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்களும் பதவி விலகிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

வாதங்களைச் செவிமெடுத்த நீதிபதிகள் இந்தியத் தேர்தல் ஆணையம், இந்திய அரசு, தமிழகச் சட்டமன்றச் செயலாளர், பதவி விலகிய ஐந்து எம்எல்ஏக்கள் ஆகியோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அடுத்தகட்ட விசாரணை ஜூலை 31ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்