தமிழகத்தில் வண்ண அப்பளங்களுக்குத் தடை

தமிழகத்தில் வண்ண அப்பளங்களுக்குத் தடை

1 mins read
b5b7dfd0-6610-41f2-b8e0-2ce4eb95a789
வண்ண அப்பளங்களை அடிக்கடிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினை, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கும்கூட வாய்ப்பு உள்ளதாக அந்தத் துறையின் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  - கோப்புப் படம்: தினமலர்

சென்னை: தமிழகத்தில் நிறமூட்டிகளைப் பயன்படுத்தி விற்கப்படும் வண்ண அப்பளங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிறமூட்டிகளால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தடை விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வண்ண அப்பளங்கள் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் அவற்றை வாங்க ஆசைப்படக்கூடும் என்றும் உடல்நலத்தை மனத்திற்கொண்டு அவற்றை வாங்கித்தர வேண்டாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

வண்ண அப்பளங்களை அடிக்கடிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினை, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கும்கூட வாய்ப்பு உள்ளதாக அந்தத் துறையின் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, பாரம்பரியமான முறையில் உளுந்து, அரிசி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பளத்தை மட்டுமே பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டுமென உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், பொருள்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் வண்ண அப்பள விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்தது‌.

அதேபோல் பச்சை முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘மயோனீஸ்’ விற்பனைக்கும் வண்ணங்கள் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய், சூடான உணவுப் பண்டங்களான போண்டா, வடை, பஜ்ஜி ஆகியவற்றைச் செய்தித்தாளில் மடித்துக்கொடுத்து விற்பதற்கும் உணவுப் பாதுகாப்புத்துறை தடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு சில உணவுப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

குறிப்பாக, குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை சார்ந்த போதைப்பொருள்கள், நிக்கோடின் கலந்த மெல்லும் உணவுப் பொருள்களுக்குத் தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

தற்போது வண்ண அப்பளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உணவுவண்ணம்பாதுகாப்புத் துறைபுற்றுநோய்சுற்றுலா