விஜய் பாடல்களுக்குத் தடை; ‘ஜனநாயகனு’க்கு இனி தடை இல்லை

விஜய் பாடல்களுக்குத் தடை; ‘ஜனநாயகனு’க்கு இனி தடை இல்லை

படம்: தி நியூஸ் மினிட்

18 Mar 2026 - 4:00 pm

1 mins read

சென்னை: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு மத்திய தணிக்கைக்குழு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் எனத் தெரிகிறது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், அறிவித்த தேதியில் படம் வெளியாகவில்லை.

இதையடுத்து, படக்குழுவினர் சான்றிதழ் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையாததால் தணிக்கை வாரியத்திலேயே மேல்முறையீடு செய்தனர்.

தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழு படத்தைப் பார்த்துவிட்டதாகவும் படத்தை வெளியிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக் குழுவினர் அறிவுறுத்தல்படி, இரு காட்சிகள், வசனங்களை நீக்க படக்குழு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு படம் வெளியாகுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அதையொட்டி படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்களில் ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஜய் நடித்துள்ள திரைப்பாடல்களை பள்ளிகளில் பயன்படுத்த வாய்மொழித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவர்கள் பலர் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் பள்ளி ஆண்டு விழா, கலை விழாக்களில் அவரது திரைப்பாடல்களைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விஜய்தவெகபள்ளிமாணவர்கள்திரைப்படம்தடைவெளியீடு