எஸ்பிஐ வங்கியில் ரூ.904 கோடி முறைகேடு: சிபிஐ வழக்கு

எஸ்பிஐ வங்கியில் ரூ.904 கோடி முறைகேடு: சிபிஐ வழக்கு

படம்: எக்கானமிக் டைம்ஸ்

07 Nov 2026 - 4:36 pm

2 mins read

மும்பை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் ரூ.904.32 கோடி நிதி மோசடி செய்ததாக எஃப்ஆர்எல் (ஃப்யூசர் ரீடெய்ல் லிமிடட்) நிறுவனம், அதன் நிறுவனர்கள் கிஷோர் லட்சுமிநாராயண் பியானி, ராகேஷ் கோபிகிஷன் பியானி உள்ளிட்ட சில தரப்பினர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.

எஸ்பிஐ வங்கி கடந்த அக்டோபர் 9 அன்று அளித்த புகாரின் அடிப்படையில், நவம்பர் 4ஆம் தேதி இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சதி, ஏமாற்று வேலை, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் உள்ள குற்றப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதையடுத்து, மும்பையில் உள்ள பியானியுடன் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், எஃப்ஆர்எல் நிறுவனத்துடன் தொடர்புடைய 13 நிறுவனங்களுக்கு நிகரத் தொகையாக ரூ.5,878.28 கோடி கைமாறியது.

மேலும், போதிய நிதித் திறன் இல்லாத 9 நிறுவனங்களுடன் ரூ.1,263.68 கோடி அளவுக்குப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வைப்புத்தொகை பல மடங்கு உயர்த்திக் காட்டப்பட்டது, குழும நிறுவனத்தின் மூலம் கடன்கள் முறைகேடாகத் திருப்பிவிடப்பட்டது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எஃப்ஆர்எல் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.

அதனால் எஃப்ஆர்எல் நிறுவனக் கணக்கை ஏப்ரல் 2021 முதல் வாராக் கடனாகவும் மார்ச் 2026ல் மோசடிக் கணக்காகவும் எஸ்பிஐ வங்கி முறைப்படி அறிவித்தது. இந்த விவகாரம் இந்திய சில்லறை வர்த்தகத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்