சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
தவெக அரசைக் கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் அந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
அந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் இருவரும் முன்பிணை பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் கைப்பேசி அழைப்புகளின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த மேலும் நால்வரிடம் திருவல்லிக்கேணி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள்
கைதானவர்களுடன் அடிக்கடி கைப்பேசியில் பேசியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரைக் கைது செய்ய காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
விமான நிலையங்களில் அவரைப் பற்றி அறிவிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சட்டவிரோத ஹவாலா பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தச் சிங்கப்பூர்த் தொழிலதிபர் யார் என்று தெரியவந்துள்ளது.
அவரது பெயர் லட்சுமண பெருமாள் என்றும் சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் அவர், சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அந்த தொடர்பின் மூலமாக குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், லட்சுமண பெருமாளை தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்றும், அவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்பிணை மனு மீது நடந்த நீதிமன்ற விசாரணையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

