சென்னை: சென்னையில் 26 கோடி ரூபாய் செலவில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைய உள்ளன.
மேலும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மை, குப்பைக் கட்டுப்பாட்டை தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இரண்டு மண்டலங்களிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்க ஒப்பந்தப் புள்ளி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேயர் பிரியா தலைமையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மாநகராட்சியின் 289 குப்பை அகற்றும் வாகனங்களில் ரூ.1.31 கோடியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, ஜிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிக்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
‘கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்’ (ஜிசிசி) ஜூலை 29 முதல் அதன் அனைத்து மண்டலங்களிலும் பெரிய அளவிலான துப்புரவுப் பணியை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் இப்பணி இடம்பெறும். அதன்படி கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்படும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று துப்புரவுப் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை 4 ஆண்டுகள் கண்காணிக்க ரூ.19.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டுதோறும் 50,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை மாநகரில் ரூ.8.46 கோடியில் 81 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் ரூ.5.75 கோடியில் அறிவியல் பூங்கா, அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு தமிழறிஞர் அவ்வை நடராஜன் முதன்மை சாலை என பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மேயர் பிரியாவுடன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.