‘பாரதியார் இல்லம்’: இன்ஸ்டகிராமில் புதிய கணக்கு தொடங்கிய தமிழக அரசு

‘பாரதியார் இல்லம்’: இன்ஸ்டகிராமில் புதிய கணக்கு தொடங்கிய தமிழக அரசு

படம்: இந்து தமிழ் திசை

08 Mar 2026 - 3:27 pm

1 mins read

சென்னை: மகாகவி பாரதியாரின் பெருமைகளை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் இன்ஸ்டகிராமில் ‘பாரதியார் இல்லம்’ என்ற புதிய கணக்கை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதில் பாரதியாரின் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றுடன் மிக அரிய புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தித்துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழ் ஆர்வலர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாரதியார் தனது இறுதி நாள்களை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள இல்லத்தில் கழித்தார். தமிழக அரசு அவரது நினைவாக அந்த இல்லத்தைப் பராமரித்து வருகிறது.

மேலும், பாரதியார் வசித்த எட்டயபுரம் மற்றும் வாரணாசி இல்லங்களும் நினைவு இல்லங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன.

பாரதியார் பயன்படுத்திய பொருள்கள் பல இந்த இல்லங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள இந்தப் பொருள்களுடன் அவரது வாழ்க்கைக் குறிப்புகள், அரிய புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றைய நவீன சூழலில் பாரதியாரின் ஒப்பற்ற சிந்தனைகளையும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் இளையர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அதை ஏற்று தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் ‘பாரதியார் இல்லம்’ என்ற புதிய இன்ஸ்டகிராம் வலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்