சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான ‘மகாகவி தினத்தை’ முன்னிட்டு, இன்று (11.09.2026) சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்,” எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் 11.12.1882 அன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னச்சாமி – லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்தில் பயின்ற அவர், ஏழு வயதிலேயே சிறந்த தமிழ்க் கவிதைகள் இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவரது 11வது வயதில் புலவர் பெருமக்களால் ‘பாரதி’ (கலைமகள்) என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது.
தனது 15வது வயதில் தந்தையின் மறைவுக்குப் பிறகு, காசிக்குச் சென்று சில காலம் ஜெய்நாராயண் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்கம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். 1898ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், 1902ஆம் ஆண்டு எட்டயபுரம் அரசவையில் மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
1904ல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பாரதியார், பின்னர் ஜி. சுப்பிரமணிய ஐயரின் அழைப்பை ஏற்றுச் சென்னை வந்தார். அங்கு ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் உதவி ஆசிரியராகவும், ‘இந்தியா’ வார இதழின் ஆசிரியராகவும் திறம்படப் பணியாற்றினார். மேலும், 1910ஆம் ஆண்டில் ‘கர்மயோகி’ என்ற தமிழ் மாத இதழையும் அவர் நடத்தினார்.

