சென்னை: இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) சென்னை சென்ற ஏர் இந்தியா விமானத்தின்மீது பறவை மோதியதாகக் கூறப்படுகிறது.
ஆயினும், அவ்விமானம் சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அவ்விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் என்றும் அது சென்னையில் தரையிறங்கிய பிறகே அதன்மீது பறவை மோதியது கண்டறியப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனப் பொறியாளர்களும் விமான நிலைய அதிகாரிகளும் அவ்விமானத்தில் விரிவான சோதனை மேற்கொண்டனர். அவ்விமானம் மீண்டும் கொழும்பு திரும்பவிருந்த நிலையில், அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, அதில் செல்லவிருந்த 137 பயணிகளும் வேறு ஒரு விமானத்தின்மூலம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 4) பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்ஹாமிற்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பிரச்சினையை எதிர்கொண்டது.
அவ்விமானம் தரையிறங்கியபோது அதன் அவசரகால இயந்திரம் தானாக இயங்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும், விமானிகள் அவ்விமானத்தை பர்மிங்ஹாமில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
அச்சம்பவம் குறித்து இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.