திருநெல்வேலி: எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகப் பேசினால் போதும், எந்தப் பிரச்சினையும் இன்றி கூட்டணி அமைந்துவிடும் என்று நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிரடிச் சோதனைகள் (ரெய்டு) நடத்தி கூட்டணி அமைக்கும் அவசியம் பா.ஜ.கவுக்கு இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
2021 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது.
அதன்பிறகு பாஜக -அதிமுக தலைவர்கள் இடையில் ஏற்பட்ட பல்வேறு கருத்து மோதல்களை அடுத்து பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே போட்டியிட்ட நிலையில், இரு கட்சிகளுமே தோல்வி அடைந்தன.
இதனையடுத்து அதிமுக – பாஜகவுக்கு இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் சூழலில், அதிமுக தலைவர்கள் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜனவரி 23) நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம், அதிமுக நிர்வாகி ஒருவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.
“கூட்டணி உறுதியாக வேண்டும் என்பதற்காக சோதனை எல்லாம் நடத்த வேண்டாம். இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) உடன் நேரடியாகப் பேசினால் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிடும். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர்களிடம் நடக்கும். உங்களிடம் பணம் இருந்தால் உங்கள் வீட்டுக்கு கூட சோதனை செய்ய வருவார்கள்,” எனக் கூறினார்.