பாஜக-அதிமுக உறவு: அதிமுக நிலைப்பாடு குறித்து ஜெயகுமார்

2 mins read
aaf3d8de-fad1-4190-a235-ae2e504224da
பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி மறுப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் அளித்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாஜகவுடன் அதிமுக எப்போதும் கூட்டணி அமைக்காது என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும். அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் இணைக்கப்பட்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு வழக்கம்போல் மறுப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் அளித்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஆனால், அந்தப் பதில், பாஜக-அதிமுக உறவு என்பதுபோல திரித்து வெளியிடப்பட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து திங்கட்கிழமை (நவம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “அதிமுகவின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

“எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“பாஜகவுடன் திமுகதான் மறைமுக கூட்டணியில் உள்ளது. பாஜகவுடன் மறைமுக ஒப்பந்தத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.

“அண்மையில் திருச்சி சிவா நடத்திய கட்சி நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். அமைச்சராக இருந்தபோதே பிரதமரை உதயநிதி எப்படிச் சந்திக்க முடிந்தது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சரை அழைத்தனர். இதிலிருந்து பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக கூட்டணி இருப்பது தெரிகிறது,” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் சவாலை ஏற்ற உதயநிதி இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இரு ஆட்சிகளிலும் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து நேரடி விவாதத்துக்கு தயார் என்று எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். திங்கட்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், இபிஎஸ் அழைப்பை ஏற்று முதல்வரோ, அமைச்சர்களோ விவாதத்தில் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி, என்னை அழைத்தால் நான் விவாதத்தில் பங்கேற்க தயார் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்