சென்னை: மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக சென்னை வந்த அவருக்கு, தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசுவார் என்றும் அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதற்கேற்ப இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) நண்பகலில் நடைபெற்றது.
முன்னதாக, சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் குறித்த விவரங்களை பியூஷ் கோயல் கேட்டு அறிந்ததாகத் தெரிகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் உடனான சந்திப்பின்போது பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக நிர்வாகிகளிடம் பியூஷ் கோயல் ஒப்படைத்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல் சரியானது என்ற பட்சத்தில் தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையாய் இது கருதப்படும்.

