புதுவை: புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
திங்கட்கிழமை (மே 4) மாலை 4 மணி நிலவரப்படி, ஆளும் என்ஆர் காங்கிரஸ் (ஏஐஎன்ஆர்சி) ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக இரு தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், என்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனரும் முதல்வருமான என். ரங்கசாமி, தாம் போட்டியிட்ட தட்டஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்றார்.
புதுவையில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் புதுச்சேரியில் 23 தொகுதிகளும் காரைக்கால் (5), மாஹே (1), ஏனாம் (1) ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்முறை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ், திமுக, விசிக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
எனினும் வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கம் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தது.
புதுவையில் ஆட்சியமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். இந்நிலையில், திங்கட்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பாஜக இரண்டு தொகுதிகளிலும் தவெக, திமுக தலா ஓரிடத்திலும் சுயேச்சை உறுப்பினர்கள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மேலும் ஐந்து இடங்களில் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.
என். ரங்கசாமி 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் புதுச்சேரி முதல்வராக இருந்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவர் உருவாக்கினார். அதன் பின்னர், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். தற்போது அந்தக் கூட்டணி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

