40 கேட்கும் பாஜக, கைவிரித்த அதிமுக

2 mins read
3d6b28fd-fbff-4000-a610-291e45d3c2a5
பியூஷ் கோயல், பழனிசாமி. - படம்: தினசுவடு

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளதாகவும் அதிமுக தரப்பு 30 இடங்களை மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே இருதரப்பிலும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தமிழகத்தில் அதிமுக தலைமை வகிக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும் தமிழகத் தேர்தலுக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்தார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியுஷ் கோயல், சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிமுக வழிநடத்தும் என்றும் பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் மீண்டும் உறுதிசெய்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இந்நிலையில், பாஜகவுக்கு இம்முறை 40 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதை ஏற்க அதிமுக தலைமை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாஜக வெற்றி பெறும் என அக்கட்சி அடையாளம் கண்டுள்ள அனைத்து தொகுதிகளையும் ஒதுக்க இயலாது என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் இச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்