மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குபவரும் முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சியில் பாஜக பங்கு கேட்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் பங்கு வேண்டும் என்று கேட்கவும் இல்லை, தரமுடியாது என்று அவர்களும் சொல்லவில்லை,” என்றார் அவர்.
தேமுதிகவிடம் பாஜக எந்தவிதமான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார் திரு. நயினார் நாகேந்திரன்.
“நாங்கள் யாரையும் சிரமப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. எம்ஜிஆர் தொண்டர் ஒவ்வொருவரும் திமுகவை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
“தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதற்குள் பல மாற்றங்கள் வரக்கூடும்,” என்றார் நயினார்.
திமுக கூட்டணியைவிட்டு வெளியேற காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது காரணம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், பிரச்சினை இல்லை என்றால் திமுக எம்பி கனிமொழி எதற்காக டெல்லி சென்று ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும்,” என்று கேள்வி எழுப்பினார்.
எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று தமிழக முதல்வர் பேச வேண்டும், எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் 2006ஆம் ஆண்டு தேர்தல் குறித்து இப்போது குறிப்பிட வேண்டும் என்று சுட்டிக்காட்டி கேள்விகளை அடுக்கியுள்ள அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

