திடீரென மயங்கி விழுந்த பாஜக பிரமுகர் எச். ராஜாவுக்குத் தீவிர சிகிச்சை

திடீரென மயங்கி விழுந்த பாஜக பிரமுகர் எச். ராஜாவுக்குத் தீவிர சிகிச்சை

2 mins read
8b2d1a9f-9675-4951-8ab9-4f73ca716236
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா. - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் உணர்ச்சிபொங்கப் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மயங்கி விழுந்ததால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) என்டிடிவி ஊடகத்தின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கிண்டியில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இரவு நடந்த விவாத நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக பிரமுகரும் தகவல்தொழில்நுட்பப் (ஐடி)பிரிவின் செயலாளருமான சேலம் தரணிதரன் என்பவரோடு காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் அவரால் நிற்க முடியாத நிலையில், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட எச்.ராஜாவுக்கு அவசரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சனிக்கிழமை (ஜனவரி 31) நிலவரப்படி, அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், எச்.ராஜா நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்