சென்னை: தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்காக பாஜக பேரம் பேசியதாக தவெக நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுவது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு விதமான பேரங்களை முன்வைத்து தவெக தலைவர் விஜய்யுடன் பல தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாகவும் விஜய் அந்த அனைத்துப் பேரங்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
“ஒரு கட்டத்தில் தவெகவுக்கு 90 தொகுதிகள் தருவதாகக்கூட பேரம் பேசப்பட்டது. மேலும், ஐந்து ஆண்டுகால ஆட்சியில் சரிபாதிக் காலம் விஜய் முதல்வராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
“ஆனால், பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக நிற்போம்,” என்றார் ஆதவ் அர்ஜுனா.
கடந்த சில நாள்களாக பாஜக, தவெக கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பது குறித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், விஜய் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த மறுப்பும் வெளியாகவில்லை.
அதேசமயம், பாஜக பிரமுகர்கள் ‘கூட்டணி அமைந்தால் விஜய்க்கு நல்லது’ எனும் முறையில் கருத்து தெரிவித்து வந்தனர். சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்ற பின்னர் கூட்டணி குறித்த ஆர்வம் வலுப்பெற்றது.
இந்நிலையில், பேரம் நடத்தப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், பாஜகவினர் இத்தகைய பேரம் நடத்தப்பட்டதாக ஆதவ் கூறுவதை மறுத்துள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பு, விஜய்யுடன் அதிமுக கட்சித் தலைமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, விஜய்க்கு முதல்வர் பதவி என்றும் தவெகவுக்கு நூறு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரியதாக தகவல் வெளியானது.

