தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டம்

அதிகரிக்கப்படும் நாடாளுமன்ற இடங்களால் தென்மாநிலங்களுக்குப் பாதிப்பு

தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டம்

3 mins read
b9934403-31cc-443d-ad40-1ea316fc1488
தொகுதி மறுவரையறை குறித்து திமுக எம்.பி.க்களுடன் காணொளி வழியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தொகுதி மறுவரையறை குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொளி வழியாக அவர் ஆலோசனை நடத்தினார்.

ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக் கூட்டத்தில் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்ற இடங்களை 543லிருந்து 850ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 815 இடங்கள் மாநிலங்களுக்கும், 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும்.

தென்மாநிலங்களுக்குப் பாதிப்பு

தற்போதுள்ள 530 மாநில இடங்கள், 13 யூனியன் பிரதேச இடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய உயர்வாகும்.

2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம்.

இதன்படி, 850ல் 283 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 567 இடங்கள் பொது மற்றும் பிற பிரிவினருக்கு இருக்கும்.

அதிகமான இடங்கள் பொதுப்பிரிவினருக்குக் கிடைக்கும் என்பதால், அரசியல் ரீதியான எதிர்ப்புகள் குறையும் என மத்திய அரசு நம்புகிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய இடங்களும் கிட்டத்தட்ட 56 விழுக்காடுவரை அதிகரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 39லிருந்து 61 இடங்களாகவும் கேரளாவில் 20லிருந்து 31 இடங்களாகவும் உயரும்.

உத்தரப் பிரதேசத்தில் 80லிருந்து 125 ஆகவும், பீகாரில் 40லிருந்து 62 ஆகவும், மகாராஷ்டிராவில் 48லிருந்து 75 ஆகவும் உயரும்.

விழுக்காடு அடிப்படையில் உயர்வு சமமாக இருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் 45 அதிக இடங்களுடன் பெறும் ஆதாயம், தமிழ்நாடு கூடுதலாகப் பெறும் 22 இடங்களைவிட இருமடங்காகும்.

இது வடக்கு - தெற்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்க ஸ்டாலின், ப.சிதம்பரம் அறைகூவல்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது திட்டமிட்ட சதி என்று புதன்கிழமை (ஏப்ரல் 15) நடந்த செய்தியாளர் கூட்டத்தில்  ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது திட்டமிட்ட சதி என்று புதன்கிழமை (ஏப்ரல் 15) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். - படம்: இவி பாரத்

தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்குச் சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிகக் கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று புதன்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள காணொளியில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. இந்தக் கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. எட்டுக் கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது.

“அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும்,” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது தென்மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் 24.3 விழுக்காட்டினர் இருக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் இது 20.7 விழுக்காடாகக் குறையும். இதன் மூலம் தென்மாநிலங்களின் குரல் அழுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 50% எண்ணிக்கை உயர்த்தப்படுவதாக கூறுவதெல்லாம் வெறும் மாயை. அப்படி உயர்த்தும்போது தமிழகத்தில் தற்போதுள்ள 39 தொகுதிகள் 58 தொகுதிகளாக உயரும். அதுவே எல்லை வரையறைக்குப் பிறகு 46ஆகக் குறையும் என்றார் அவர்.

இந்தத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை.

குறிப்புச் சொற்கள்