துணை அதிபர் வருகையின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை

துணை அதிபர் வருகையின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை

படம்: தினத்தந்தி

31 Oct 2026 - 10:43 pm

1 mins read

மதுரை: துணை அதிபர் வருகையின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளித்த நிலையில், மின் விநியோகம் உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (அகடோபர் 30), பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காகத் தென் தமிழகம் வந்த துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிலின் உட்பகுதியில் எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகளில் மின்சாரம் மீண்டும் திரும்பினாலும், சற்று நேரத்திலேயே மீண்டும் துண்டிக்கப்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், முக்கியமான விருந்தினர்களின் வருகையையொட்டி பிற்பகலில் இருந்தே கோவில் முழுவதும் ‘ஜெனரேட்டர்’ மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது கோவில் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தற்காலிக மின்தடைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், உடனடியாகச் செயல்பட்டு இரண்டு நிமிடங்களுக்குள் அனைத்தும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்