சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் அந்த அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) இரவு மின்னஞ்சல் வழி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழக ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து காவல்துறை சோதனையிட்டது. அதன் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.
ஏற்கெனவே சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி ராணுவப் பயிற்சி மையம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உணவகம் என மூன்று இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அண்மையில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், அடுத்த மிரட்டல் வந்துள்ளது. அண்மைக் காலமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், உயர் நீதிமன்ற வளாகம் என பல்வேறு இடங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.