சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
afd52ecf-899c-4cc7-a79a-e63f21c1e87e
சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டரங்கம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டரங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து காவல்துறை அங்குச் சோதனை நடத்தியது.

சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (மே 9ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 3 மின்னஞ்சல்கள் வந்தன.

பாகிஸ்தான் பெயருடன் தொடங்கும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அது வந்ததாகவும் அதில், சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரத்த ஆறு ஓடும் என எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், “ஆப்பரேஷன் சிந்தூருக்காகச் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு வைப்போம். எங்களது எச்சரிக்கையும் மீறி போட்டிகள் நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு வெடிக்கும்,” என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மின்னஞ்சலைப் படித்துப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சங்க நிா்வாகிகள், உடனே சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் விளையாட்டரங்கிற்கு விரைந்துவந்து சோதனை நடத்தினா்.

பல மணிநேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்