சென்னை: மத்திய கல்வி அமைச்சும் தேசிய புத்தக அறக்கட்டளையும் இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை டெல்லி பிரகதி திடலில் நடத்தவுள்ளன. இந்தப் புத்தகத் திருவிழாவையொட்டி பல்வேறு கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் நடைபெறும்.
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். அத்துடன், புத்தக வர்த்தகம் தொடர்பான சந்திப்புகளும் இலக்கிய நிகழ்வுகளும் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை இந்தப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் மாணவர்களும் கல்வியாளர்களும் அறிவுத் திறனையும், அரிய தகவல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.