சென்னை: தமிழகப் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, ஐந்து உயரதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதல்வர் விஜய் அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைத்தார்.
அந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, விரிவான விசாரணை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
தற்போதைய தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களுக்கான பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும், முந்தைய திமுக ஆட்சியின்போதே மேற்கொள்ளப்பட்டவை என அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், புத்தகக் கொள்முதல் முறைகேட்டுப் புகாரின் அடிப்படையில், உயரதிகாரிகள் ஐவரைப் பொது நூலக இயக்குநர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணைத் தலைமை நூலகர், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மற்றும் தகவல் அலுவலர், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத் தலைமை நூலகர், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகர், பொது நூலக இயக்ககத்தின் தலைமைக் கணக்கு அலுவலர் என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐவரும் புத்தகக் கொள்முதலை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, பேச்சுவார்த்தைக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.
