ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
அத்தொகுதி எம்எல்ஏவாக இருந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து அங்கு பிப்ரவரி (5 ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. திமுக கூட்டணி சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.
இம்முறை இடைத்தேர்தலில் 46 பேர் களம் இறங்கியுள்ளனர். புதன்கிழமை காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏறக்குறைய 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்கள் வாக்களிக்க தொகுதி முழுவதும் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருத்தப்படும் 9 இடங்களில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
காலை 9 மணி நேர நிலவரப்படி 11% ஆக இருந்த வாக்குப்பதிவு விகிதம் பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி 43% பதிவாகி இருந்தது.
மாலை 3 மணி நிலவரப்படி 54% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.