புதுடெல்லி: பிரிட்டனில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 1967ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தச் சிலையை ஓர் ஏலத்தில் வாங்கியது அந்த அருங்காட்சியம்.
இந்நிலையில், 1957ல் ஆராய்ச்சியாளர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் மூலம் லண்டனில் உள்ள சிலை, தஞ்சை மாவட்டம் தடிகொம்பு ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருந்து மாயமான சிலைதான் என்பது உறுதி யானது.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், திருமங்கை ஆழ்வார் சிலை, பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்டு, நவீன நகல் சிலையால் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, சிலையை ஒப்படைக்க பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி, பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் இந்தியத் தூதரகத்திடம் அந்த வெண்கலச் சிலை ஒப்படைக்கப்பட்டது.
திருமங்கை ஆழ்வார் சிலையுடன் மேலும் மூன்று சிலைகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

