சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதன்கிழமை (ஏப்ரல் 9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக்குமார், 42, மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கார்த்திகேயன், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பல பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
விசாரணையில், மோசடி தொகையில் 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கிக் கணக்கிலும் 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து பினாமிகள் பெயரில் 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.
இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் பிணையில் இருந்தாலும், அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை (ஏப்ரல் 09) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
மேலும் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் ஏப்ரல் 9ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 9) தமது வழக்கறிஞருடன் முன்னிலையானார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. ஏப்ரல் 20ஆம் தேதி பிணை உத்தரவாதத் தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

