சென்னை: தமிழகச் சட்டசபையில் இரண்டாம் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்குகிறது.
அப்போது 2025-2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார்.
2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவையில் அவர் அளிப்பார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மக்களைக் கவர்வதற்குப் பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அடுத்த 2026ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தல் வருகிறது.
தேர்தலுக்கு முன்பு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தைத்தான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் வரவுசெலவுத் திட்டம்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த வரவுசெலவுத் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.