டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அண்மையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்து வருபவர். மேலும் சிம்பு, தனுஷ் ஆகியோரை வைத்தும் படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது இந்த விவகாரத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.
‘பராசக்தி’ படத்தில் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ஊதியத்துக்குப் பதிலாக சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ரூ.70 கோடிக்கு பங்களா கட்டித் தருவதாக ஆகாஷ் பாஸ்கரன் கூறியதாகவும் அதை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாகவும் மூத்த செய்தியாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன், தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருடனான தொடர்புகள் காரணமாகத் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

