விஜய்யிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தொழிலதிபர் நோட்டிஸ்

விஜய்யிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தொழிலதிபர் நோட்டிஸ்

படம்: தமிழ் முரசு

01 Feb 2026 - 6:16 pm

2 mins read

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததாகத் தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர் விஜய்மீதும் மாவட்டச் செயலாளர் மீதும் தூத்துக்குடி தொழிலதிபர் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மாவடி பண்ணையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கண்ணன் பண்ணையார்.

இவரது மகன் நிவாஸ், கடந்த வாரத்தில் தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டரின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அப்போது, தொழிலதிபர் கண்ணனும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துவிட்டதாக மாவட்டச் செயலாளர் தரப்பில் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், தாம் எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகத் தொழில் செய்து வருவதாகக் கூறும் கண்ணன் பண்ணையார், “கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக, நான் கட்சியில் சேராமலேயே சேர்ந்ததாகப் பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர்.

“என்னையும் எனது நிறுவனத்தையும் நம்பி ஏறக்குறைய 1,000 குடும்பங்கள் உள்ளன.

“இந்தத் தவறான செய்தியால் எனது தொழிலின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

“எனது அனுமதியின்றி என் பெயரைப் பயன்படுத்தியது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

“எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக தவெக தலைவர் விஜய்க்கும் மாவட்டச் செயலாளர் பிரைட்டருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“இதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்வேன்,” என்று கண்ணன் பண்ணையார் எச்சரித்துள்ளார்.

தொழிலதிபர் கண்ணனின் தம்பி விஜயகுமார், தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்