வாக்குகளை விலைக்கு வாங்குவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்: சீமான்

2 mins read
b8528300-23c0-406c-a7fb-ab572755e37f
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வடபழனியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொகுதிகளின் கள விவரம் குறித்தும் கூட்டணி குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் திரு சீமான் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் கட்சிக்காரர்களின் பணப்பெட்டிகள் கைமாறுவதும், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதும் ஒவ்வொரு தேர்தலிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.

அவர்களைப் பிடிப்பதற்காக தமிழகத்தின் சாலைகளில் வாகனங்களை மறித்து சோதனையிடுவதற்கு தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்துள்ளது. இருப்பினும், அரசியல்வாதிகளின் வாகனங்கள் என்று தெரிந்தாலே பறக்கும் படையினர் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

மாறாக, மளிகைக்கடைக்குச் செல்வோரையும், மருத்துவமனைக்கு தமது உற்றார், உறவினரின் அறுவைச் சிகிச்சைக் கட்டணம் செலுத்த பணம் கொண்டு செல்வோரையுமே பிடிக்கிறது. அதனால் வியாபாரிகளும் அப்பாவி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அரசியலை வியாபாரம் ஆக்கக் கூடாது. ஆனால் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.

மக்களவைத் தேர்தலுக்கு ரூ.50 கோடியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.15 முதல் 20 கோடி ரூபாயும் செலவு செய்து வெற்றி பெறும் வேட்பாளர், போட்ட பணத்தை மீட்டெடுக்கும் நோக்கில்தானே செயல்படுவார்.

இதுபோன்று, வாக்குக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய கட்சிகள் தொடங்குபவர்கள், ஏற்கெனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளைப் பிடிக்காமல் தான் மாற்றுக்கட்சி என்று வருகிறார்கள். ஆனால் அதன் பிறகு, அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அதே பாணியில் செயல்படத் தொடங்குகின்றனர்.

எனவே, வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடக் கூடாது என்பதில் நாம் தமிழர் கட்சி உறுதியாக உள்ளது என்று திரு சீமான் கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு 1.1 விழுக்காட்டிலிருந்து 8.22 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளோம். 36 லட்சம் பேர் பணம் வாங்காமல் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் மாற்றத்திற்குத் தயாராகவே உள்ளனர்,” என்றார் திரு சீமான்.

குறிப்புச் சொற்கள்