சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தனது பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்க உள்ளது.
அனைத்துத் தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் நான்கு இடங்களில் இந்தப் பேச்சாளர்கள் கட்சிப் பொதுக்கூட்டங்களில் பேசுவார்கள் எனத் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதையடுத்து, அடுத்த கட்டமாக, பிரசாரப் பணிகளில் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.
மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு திமுக தனது பிரசார அணியை களமிறக்குகிறது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றபோது, பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ எனும் பெயரில் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடிவானது.
234 தொகுதிகளிலும் இதற்காக ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டங்களில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் கலந்துகொண்டு அரசின் சாதனைகளை விளக்கிப் பேசவுள்ளனர்.
சினிமா நட்சத்திரங்கள், வழக்கறிஞர்கள், மேடைப் பேச்சாளர்கள் எனப் பலரை அரசியல் கட்சிகள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
இவர்களுக்கு கட்சித் தலைமை ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கு எனத் தனியாக தொகை ஒதுக்கும். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணம், தங்கும் வசதிகளுக்கு பொறுப்பேற்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்வர்.
கடந்த காலங்களில் நடிகைகள் நமிதா, விந்தியா, நடிகர்கள் வடிவேலு, செந்தில், ஆனந்தராஜ், திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலர் நட்சத்திரப் பேச்சாளர்களாக வலம்வந்தனர்.
இந்த ஆண்டும் பலர் பிரசாரத்தில் ஈடுபடுவர் எனத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழக அரசு தமிழ்த் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் மேலும் பல திரை நட்சத்திரங்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

