‘பாடை’யுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

‘பாடை’யுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

2 mins read
அரசுக்கு எதிராக ‘ஒப்பாரி’ வைத்து நூதனப் போராட்டம்
4a5095bb-00fe-460e-a183-2dd647545858
செய்தியாளர்களிடம் பேசும் அதிசய பாண்டியன். அருகில் அவரது ஆதரவாளர்கள். - படம்: தினமணி
Google News Preferred Icon

திருநெல்வேலி: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை (மார்ச் 30) தொடங்கியுள்ள நிலையில், நெல்லையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளரைப் பிணம் போல பாடையில் சுமந்து வந்து மனுதாக்கல் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அதிசய பாண்டியன் போட்டியிடுகிறார்.

மனுத் தாக்கல் செய்ய வந்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் கூறி வினோதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

கொக்கிரகுளம் பேருந்து நிலையத்தில் தனது ஆதரவாளர் ஒருவரைப் பிணம் போல இருக்கையில் படுக்கவைத்து, அவருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்வதுபோல நடித்தனர்.

இந்தத் திடீர் நிகழ்வைக் கண்ட பொதுமக்களும் வழிப்போக்கர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த நபரைப் பாடையில் தூக்கிச் சுமந்தபடி, அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், பாடையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. இந்த ஆட்சியைக் கண்டித்து, மக்களின் கவனத்தை ஈர்க்கவே இந்த நூதன முறையைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் வேட்பாளர் அதிசய பாண்டியன்.

காவலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, பாடையைக் கீழே இறக்கி வைத்த அதிசய பாண்டியன், தன்னுடன் நான்கு ஆதரவாளர்களை மட்டும் அழைத்துச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இன்று முதல் நாளே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், நெல்லையில் நடந்த இந்த ‘பாடை’ ஊர்வலம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்