சென்னை: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.9.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாக்லேட் வடிவிலும் உணவு உறைகளுக்குள்ளும் மறைத்து கஞ்சா கடத்திவந்த குற்றத்தின் பேரில் இருவரையும் அவற்றை வாங்கிச் செல்ல வந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
அண்மைக் காலமாக தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
கடத்தல்காரர்கள் நேரடியாகச் சென்னை வராமல் துபாய் சென்று, பின்னர் அங்கிருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கு வருகிறார்கள். இதையடுத்து, விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பேங்காக்கில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட வட இந்தியப் பயணி ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்ற அவர், திரும்பி வரும்போது ஏன் சென்னை வந்தார் எனக் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
சந்தேகம் வலுக்கவே, அவரது உடைமைகள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன. அவரது பெட்டியில் இருந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைப் பிரித்துப் பார்த்தபோது, உயர் ரக ‘ஹைட்ரோஃபோனிக்’ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல், மற்றொரு பயணி தனது பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது. இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கைதான மூன்றாமவர், பிடிபட்ட இருவரும் கொண்டுவந்த கஞ்சா பொட்டலங்களைப் பெற்று வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
விமான நிலையப் பகுதியில் நின்றிருந்த அவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்தபோது அவர் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது.