சென்னை: தமிழ் நாட்டில் மாநில உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தியதால் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டியுள்ளார்.
தேசிய சராசரியைக் காட்டிலும் தனிநபர் வருமானத்தை அதிகரித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு நம் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி 2022-23ஆம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது. இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி பாடுபடும் என்றும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி பெற்று வரலாறு படைக்கும் என்றும் செல்வப் பெருந்தகை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.