சென்னை: தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.196,309ஆக உயர்ந்துள்ளது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு, சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்குத் திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் திமுக ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் இது எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவைப் பகிர்ந்துள்ள திரு ஸ்டாலின், மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளியல் முன்னேற்றத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தியதால் தனிநபர் வருமான உயர்வு சாத்தியமானதாக தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
“தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள ‘திராவிட மாடல் ஆட்சி 2’ல் முதல் மாநிலமாக உயர்வோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பீகாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மக்களவையில் நாட்டின் தனிநபர் வருமான விவரங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக பதிலளித்திருந்தார்.

