தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: உயிர் தப்பிய குடும்பம்

2 mins read
998cb8ff-8387-46ee-955d-79734d5b4872
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பின்னர், கிரேன் மூலம் காரைத் தூக்கி அப்புறப்படுத்தினர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில், அதிர்ஷ்டவசமாகக் காருக்குள் இருந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாடகைக் காரில் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான விக்னேஷ் (45), அவரது மனைவி தன்யா (40), அவர்களது பிள்ளைகள் அக்‌ஷயா (12), அத்வைத் (9) ஆகியோர் பயணம் செய்தனர்.

மரியதாஸ் (47) என்பவர் காரை ஓட்டினார்.

ஓஎம் ஆர் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலையின் நடுவே ஏற்பட்ட 10 அடி ஆழ பள்ளத்துக்குள் கார் விழுந்ததால் காருக்குள் இருந்த ஐவரும் கூச்சலிட்டனர்.

இந்நிலையில், அங்கு வந்த தரமணி காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் ஆகிய அனைவரும் கிரேன் மூலம் காரைத் தூக்கி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காருக்குள் இருந்த ஐவரையும் கண்ணாடியை உடைத்து அடுத்தடுத்து மீட்டனர். கார் ஓட்டுநர் மரியதாசுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திடீர் பள்ளத்துக்கான காரணம்குறித்து தரமணி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “விபத்து ஏற்பட்ட பகுதியில் ராட்சத கழிவு நீர்க் குழாய் செல்கிறது.

“இந்தக் குழாய் வழியாகத்தான் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம்குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்,” என்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மெட்ரோ ரயில் பணி நடை பெறும் இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

“இந்தப் பள்ளம், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எந்தப் பணியுடனும் தொடர்புடையது அல்ல. அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்