சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அவருக்கு பெரியார் ஆதரவு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சீமான்மீது தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
விரைவில் நடக்கவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெரியார் விவகாரம் பிரசாரப் பொருளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பெரியார் குறித்து எழுதப்பட்ட பாடலை உணர்ச்சி பொங்க மேடையில் பாடினார்.
அவர் பாடியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக உன்னிப்பாக கவனித்தார். பின்னர் கிருஷ்ணாவை அருகில் அழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

