தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடி குறித்து கேலிச் சித்திரம்; முடக்கப்பட்ட விகடன் இணையத்தளம்

2 mins read
19f3997e-b48a-4443-89b8-b2ea6743348a
இந்தியப் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டதன் தொடர்பில், விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கேலிச்சித்திரத்தை விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனால், பாஜகவின் விமர்சனங்களுக்கு ஆளான விகடன்மீது பாஜக தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் அளித்தார்.

அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை விகடன் நிறுவனம் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், “விகடன் இணையத்தளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. 

“நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இணையத்தள முடக்கத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்