சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி கடந்த இம்மாதம் 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். சனிக்கிழமை (செப்டம்பர் 20) அவர் நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் நாகை சென்றார்.
வழி நெடுக தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
பின்னர் தனது பிரசார வாகனத்தின் மூலம் நாகை அண்ணா சிலை அருகே திரண்டிருந்த மக்களிடம் பிற்பகல் 1.30 மணிக்கு விஜய் பேசினார். விஜய்யின் பிரசாரத்தைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளையும் மீறி தவெகவினர் ஆங்காங்கே கட்டடங்களில் ஏறி நின்றதைப் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், புத்தூர் அண்ணா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் ஏறியதில் சுவர் சாய்ந்து விழுந்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.